அமெரிக்காவின் ‘ஏல்’ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மானுடவியல்(Anthropology) பேராசிரியர்
‘பெர்னார்ட் பேட் ‘ (Bernard Bate) என்ற வெள்ளைக்காரர், கலைஞர் தொலக்காட்சியில்
‘சந்தித்த வேளையில்’ என்ற காலை நேர நிகழ்ச்சியில் திரு. ரமேஷ் பிரபா அவர்களுக்கு
அளித்த பேட்டியை பார்த்ததில் உறைந்தே போய்விட்டேன். ‘அழகியல்’, ‘சமுதாய
கட்டமைப்பு’, ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று சராசரி தமிழன் போல(?)
பேசியதைக் கேட்டு, ஒருநாள் எந்த வேலையும் ஓடவில்லை.
‘பெர்னார்ட் பேட்’ நிச்சயமாய் என் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்.
வெள்ளைக்காரர் வாயில் தமிழ் வருவதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பேட்டி
ஆரம்பித்த போது அதைத்தான் சொன்னார்.”
ரமேஷ் பிரபா: “வணக்கம் பெர்னார்ட் அவர்களே!”
பெர்னார்ட் பேட்: “வணக்கம் ஐயா! “(அத்தனை சுத்தமான உச்சரிப்பு)
ரமேஷ் : “நேயர்களுக்கு நீங்கள் பேசிய சில வார்த்தைகளிலேயே தோன்றியிருக்கும்.
ஒரு வெள்ளைக்காரர் எப்படி இப்படி தமிழ் பேசுகிறார் என்று.
ஆச்சர்யாமாய் இருந்திருக்கும்”.
பெர்னார்ட்: “இதில் ஆச்சர்யம் எதற்கு. இப்போது நீங்கள் ஃபிரான்ஸ் போகிறீர்கள்
அங்கே ஃபிரஞ்சு பேசினால் ஆச்சர்யப்படுகிறார்களா? இல்லையே
பின் ஏன் என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டும். தேவையில்லயே!”
ரமேஷ் : “ஏன் தமிழை படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள்?”
பெர்னார்ட்: “சுலபம். இது ஒரு தொன்மையான மொழி. இரண்டாயிரம்
ஆண்டுகள் பழமையானது. கிட்டத்தட்ட 8 கோடி பேர் பேசுகிறார்கள்.”
இப்படி ஆரம்பித்த பேட்டி படு சுவாரஸ்யமாய் இருந்தது. பெர்னார்ட்,
கிட்டத்தட்ட 28 வருடங்களாக தமிழகத்தில் தங்கி பல மனுடவியல் ஆராய்ச்சிகளையும்,
மொழி இனம் சார்ந்த விஷயங்களிலும் ஆர்வம் கொண்டு, ஒரு புத்தகமும்
சமைத்திருக்கிறார். 1982ல், தான் தமிழகத்துக்கு தன் கல்லூரி இறுதியாண்டு
“களப்பணி” (கவனிக்க)க்கு மதுரை வந்து பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களிடம்
தமிழ் கற்றதாய் சொன்னார். அவரை கிட்டத்தட்ட தன் தந்தை போல் பாவித்திருக்கிறார்.
உணர முடிந்தது. அவரிடம் தீவிரமாய் தமிழ் கற்றிருக்கிறார்.
ரமேஷ் : ” தமிழ் கற்பது எப்படியிருந்தது?”
பெர்னார்ட்: “கொஞ்சம் சுலபம். தமிழில் ஒரு எழுத்துக்கு ஒரு சத்தம் தான். ‘அ’ என்றால்
அது ‘அ’ தான். ‘ஆ’ என்றால் அது ‘ஆ’. ஆனால் ஆங்கிலம் அப்படியில்லை.
உங்களுக்கே தெரியும். ‘A’க்கு எத்தனை வகையான சத்தம்வரும்.ஆனால்
கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது உண்மைதான்”.
ரமேஷ் : “அப்போதெல்லம் என்ன செய்வீர்கள்?”.
பெர்னார்ட்: (சிரித்தபடி) “ஆரம்பத்தில், வந்த புதிதில், மதுரையில் (ஒரு தெருபெயர் சொல்லி)
… தெருவில் சின்ன அறையில் தான் தங்கியிருந்தேன். சின்னச் சின்ன குழந்தைகளை
பக்கத்தில் அமர வைத்து “அது என்ன?” என்பேன். “சக்கரை” “அது பேர்தான் சக்கரையா”.
இப்படித்தான் ஒவ்வொரு வார்த்தையையும் கற்றுக்கொண்டேன்”.
பெர்னாட், மதுரைக்காரர் என்று சொல்லுமளவுக்கு மாறிவிட்டார். இளம் வயதில்,
‘இந்த மொழியை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும்’ ,’அப்படி என்னதான் இதில் இருக்கிறது’
என்ற வெறிதான் தான்னை கற்க வைத்தது என்றார். பேசும் போது நிதானம். தற்போது
‘தமிழ் மேடைப் பேச்சு’ பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ரமேஷ் : “மேடைப் பேச்சு சம்பந்தமாக நீங்கள் நேரடி பேச்சுகளை கேட்பதுண்டா?”
பெர்னார்ட்: “நிறைய கேட்டிருக்கிறேன்.ஒரு பெரிய தொகுப்பே வைத்திருக்கிறேன்.
எனக்கென்னமோ உலகின் மிகப்பெரிய பேச்சுத்தொகுப்பு என்னுடையதாகத்தான்
இருக்க வேண்டும். அவ்வளவு இருக்கிறது. மதுரையில் அடிக்கடி கோவில்களில்
நடக்கும் சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன். நிறைய பட்டிமன்றங்கள்.
திரு.ஞானசம்பந்தம், திரு. நெல்லை கண்ணன், திரு. பாப்பையா.
பல கட்சி கூட்டங்களுக்கு போயிருக்கிறேன்”.
ரமேஷ் : “குறிப்பாக?”
பெர்னார்ட்: “நிறைய. திரு. வை. கோபால்சாமி, திரு. தீப்பொறி ஆறுமுகம்,
கலைஞர் கருணாநிதி…. ஆனால் அண்ணாதுரை, பெரியார் போன்றவர்களின்
பேச்சுக்களை கேட்கமுடியவில்லை. நான் வருவதற்கு முன்பே அவர்கள்
மறைந்துவிட்டார்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்திருக்கிறது.
பெரும்பான்மை படிக்காதவர்கள் இருக்கும் கூட்டங்களில் ஏன் சுத்தத் தமிழில்
பேசுகிறார்கள் என்று.”
பின் அதற்கான காரணங்களை விளக்க ஆரம்பித்தார். மேடைப்பேச்சு
1890 களில் பிற்பாதியில் தான் தொடங்கியதாகவும். அப்போதெல்லாம்”அவர்களே”
“அவர்களே” என்று சொல்வதோ,(பாரதிராஜா போல் பேசிக்காட்டி) ‘”என் இனிய தமிழ் மக்களே’
என்றோ இல்ல. பெரும்பாலும் ஆங்கிலத்தில் ஐயாயிரம் பேர் முன்னிலையில் நடந்ததாகவும்
சொன்னார். அக்கால கட்டத்தில், தமிழில் மேடைப்பேச்சு முதன் முதலாக திருவல்லிக்கேணி
கடற்கரையில் பாரதியார், சுப்பிரமணியம் சிவா, சாமிநாத சர்மா… , ஆகியோர்களால் தான்
முதன் முதலில் கொண்டுவரப்பட்டது. அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்
என்றார். பாவணார், மறைமலை அடிகள், உ.வே.சாமிநாதன்… அடுக்கிக்கொண்டே போனார்.
“நாமெல்லாம் செத்துவிடலாம்”என்று தோன்றியது.
என் நண்பனிடம் உனக்கு இந்த பெயரெல்லாம் தெரியுமா? (எனக்கு தெரியும்)
என்று நான் கேட்டதற்கு, “எனக்கு சுப்பிரமணியம் சிவாவுடன் முடிஞ்சுபோச்சு” என்றான்.
அண்ணாதுரை, பெரியார் போன்றவர்களின் பேச்சுக்கள் முறையே 3, 5 தகடுகள் தான்
இருக்கிறது என்று கவலைப்பட்டார். தமிழில் சுருக்கெழுத்து எப்படி வந்தது, அதை எப்படி சுதந்திரப்
போரட்டத்திற்கு பயன் படுத்தினார்கள் என்பது முதல், திராவிட கட்சிகளின் எழுச்சியும், பின் தேசிய
கட்சிகள் தாங்களும் திராவிட கட்சிகளின் வழியையே பின்பற்ற வேண்டியிருந்தது, என்பது வரை
சரளமாக தமிழில் பரிமாறினார். ஒருமணி நேரம் வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.
தான் மதுரையில் இருந்த காலத்தில் இரவு கடைகளில் சாப்பிட்டதையும்,டீக்கடைகளிலும்
ஆட்டோகாரர்களும் தன் நாட்டின் (அமெரிக்கா) அரசியலைப் பற்றி நுணுக்கமாக பேசுவதை, அதுவும்
புஷ்கட்சி, ஒபாமா கட்சி என்று ஒவ்வொரு கட்சியின் கொள்கைகள் தெரிந்திருப்பதையும், கண்ணதாசன்
பாடல்கள், தமிழ் சினிமா பாடல்கள் கேட்பதையும் ரசித்து ரசித்து அழகான தமிழில் சொன்னார். ‘ஏல்’ல்
தன் ஒவ்வொரு வகுப்புகளிலும் ஒருமுறையேனும் தமிழ்நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும்
வாய்திறந்து விடுவேன் என்று சிரித்தார்.
ரமேஷ் : “உணவுப் பழக்கம் எப்படி?”
பெர்னார்ட்: “அய்யோ! வந்த புதிதில் ரொம்ப சிரமமாயிடுச்சு. இப்போ பரவாயில்ல.
எக்மோர் ஸ்டேசன் பக்கத்துல ஒரு ஹோட்டல். பேர சொல்லலாம்ல? ‘ராம்பிரசாத்’னு பேரு.
தோசை அற்புதமா இருக்கும். நான் எப்பவுமே அங்க தான் போவேன். அப்புறம் ஒரு
ரஜினிகாந்த் படத்துல வருமே ” நேத்து வெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதுனு…”
மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். ஆனா என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஒத்துக்கல.
இப்போ பழகிட்டாங்க”.
இப்போது தனக்கு குடும்பம் இருக்கிறது. மனைவியும் இரன்டு பிள்ளைகளும்
இருக்கிறார்கள். அதனால் அமெரிக்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பறந்துகொண்டே இருப்பதாக
சொன்னார். பிள்ளைகளுக்கு முதலில் ஊரும் மக்களும் பிடிக்கவில்லை, எப்போது பார்த்தலும்
கன்னத்தை கிள்ளி முத்தமிடுவதாக கோபப்பட்டு, இப்பொழுது தான் அன்பினால் தான் மக்கள்
அப்படி செய்வதை புரிந்து கொண்டதாக கூறினார்..
ரமேஷ் : “எது உங்களை மீண்டும் மீண்டும் தமிழகத்துக்கு வர வழைத்துக் கொண்டிருக்கிறது?”
பெர்னார்ட்: “தெரியவில்லை! என் பிள்ளைகள் கூட அடிக்கடி கேட்பதுண்டு. ஏன்பா
இந்த ஊருக்கு வந்தீங்க. நீங்க ஃபிரான்ஸ் போயிருக்கலாமே. இங்க ஏன்
வந்தீங்கன்னு… எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. அந்த இளம் வயதில்
எப்படியாவது இந்த மொழியை, மக்களை கற்க வேண்டும்னு ஏன் நினைத்தேன்!
அந்த வயதில் மதுரையில் குழந்தைகளை உட்காரவைத்து “இது என்ன சக்கரையா”
அது என்ன? என்று கேட்பது போலவே இன்றும் இருக்கிறேன். ஏன் இங்கே வருகிறேன்?
தெரியவில்லை!”
***********************************************************
எனக்குத் தெரிந்த இன்னொரு வெள்ளைக்காரர் “மதுரை மாணிக்கம்”. ஏமாற்றும் ஆட்டோ
ஓட்டுனருக்கு, இறங்கும் போது தமிழில் பேசி அதிர்ச்சி கொடுப்பது இவர் வழக்கம். நையான்டி தர்பாரில்
ஒருமுறை வந்திருந்தார். சுஜாதா கூட கணயாழியின் கடைசி பக்கங்களில் இவரைப்பற்றி எழுதியிருக்கிறார்.
“எங்கோ எவருக்கோ( திரு. பெர்னார்டும், திரு. மாணிக்கமும் மன்னிக்க) இருக்கும் அக்கறை….ம்ம்ம்ம்.
-பேரின்பா
24.03.09
இவரைப் பற்றிய சில பதிவுகள்:
1. http://www.yale.edu/anthro/people/bbate.html
2. http://www.studia.no/uib/vare.php?ean=9780231147569
3. http://panithirai.blogspot.com/
4. http://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=139020










